அற்புத ஆண்டே வருக!

இயற்கை யதுதரும் சீற்ற மறுக
இலங்கையில் யுத்தம் அறவே யறுக
பலனைக் கருதா வடியார் பெருக
இலனை யவர்தொகை நாட்டில் குறைக
ஒழுக்க முடையவர் ஒண்பொருள் வெல்க
இழுக்க லுமில்லா நடுவணும் நீள்க
மடிவெல் குடிகள்தம் வாக்கைத் தருக
குடிநலங் காக்குந்தமி ழரசே யமைக
கற்பதும் நன்றாய் எனக்கு முடியவே
அற்புத வாண்டே? வருக..


அனைவருக்கும் புத்தாண்டு நல் எதிர்பார்ப்புகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி,
பூங்குழலி.


(பி.கு அன்பர்களை, தளைதட்டா வேறு சிறந்தச் சீர்களையும் சேர்த்து புத்தாண்டை வரவேற்க வேண்டுகிறேன்.)

11 பின்னூட்டங்கள்:

Muthu said...

ம் மரபு கவிஞரோ


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் மற்ற அனைவருக்கும்


பூங்குழலி said...

மரபுக் கவியெல்லாம் இல்லை.

கானமயிலாட
கண்டிருந்த
வாண்கோழியாகக் கூட இருக்கலாம்.

புத்தாண்டு வாழ்த்துக்கள் முத்து.


Suka said...

மரபு வழியில் புது ஆண்டுப் பிறப்பு வாழ்த்துக்கள்.. புதுமை..

நான் முயற்சித்து அழகிய கவிதையின் தளையை நான் தட்ட என் தலையை யார் தட்ட :)?

புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சுகா


பூங்குழலி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் சுகா..

குழந்தை நடக்கப் பழகும் சமயத்தில் சிலநேரம் தவறி விழலாம்.

உனக்கு சரியாக ஓடத்தெரியவில்லை. ஆகவே நடக்கப் பழகுவதை நிறுத்து என யாரும் சொல்லிவிடமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

வாருங்கள், கைத் தூக்கிவிட தமிழ்மணத்தில் நிறையபேர் இருக்கிறார்கள்.

தேவை முயற்சியே.

நன்றி.
பூங்குழலி


ஞானவெட்டியான் said...

கவிதையில் வாழ்த்த இலக்கணம் தெரியாது
ஓவியம் போட்டு வாழ்த்தவும் தெரியவில்லை
காவியம் பாட காலம் இல்லை
கவிநயம் தெரிந்தவன் இப்படித்தான் வாழ்த்தவியலும்.

"இல்லத்திலிருக்கும் அனைவருக்கும் இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்."


பூங்குழலி said...

கவிதைக்கும், வாழ்த்துக்கும் நன்றி திரு.ஞானவெட்டியான் அவர்களே.


சிங். செயகுமார். said...

பழையன கழிதலும் புதியன புகுதலும்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !


Suka said...

சரி, முயற்சிக்கச் சொல்லிவிட்டீர்கள்.. இதோ அதன் பலன் :)

உயிர்நிறை மேற்பரப் பைக்கதிர் நோக்கிக்
காட்டிச் சுழன்றுநீ நிற்பதே நன்றென
திருப்திகொள் வதுதவிர்(த்) தேடல் துவங்கினாய்
கதிரவன் சுற்றியே தேடற் பலனாய்
பிறந்ததிங் கேபுது ஆண்டு

இயற்சீர் வெண்டளையில் என்னால் இயன்ற முயற்சி .. தளைதட்டினால் தலையைத்தட்டுக..

புத்தாண்டு வாழ்த்துக்கள்
சுகா


பூங்குழலி said...

வருகைக்கு நன்றி திரு. சிங். செயக்குமார்
அவர்களே.

அருமையான கவிதைக்கு நன்றி திரு. சுகா அவர்களே..

புது ஆண்டு = புது வாண்டு = புத் தாண்டு

இதில் எது நன்றாக பொருந்துகிறதோ அதைப் போட்டுக்கொள்ளவும்.

(ஊருக்குப் போய்விட்டதால், தாமதமான பதில் :)
உங்களுக்கு புத்தாண்டு எப்படி கடந்தது அன்பர்களே?)


குமரன் (Kumaran) said...

புத்தாண்டு வாழ்த்துகள் பூங்குழலி. இன்னும் நிறைய கவிதை எழுதுங்கள்.


பூங்குழலி said...

நன்றி குமரன்,
புத்தாண்டு வாழ்த்துக்கள்.