மக்கட் தொண்டுசெய் சண்டிகேசுவர் (காதுகேளாச் சாமி?)
முந்தைய பதிவின் பல்வேறு பின்னூட்டங்களுக்குப் பிறகு எனது புரிதல்.
சரியா எனச் சொல்லவும்.
சக மனிதன் பசியால் வாடிக்கொண்டிருக்கும்போது, கடவுளுக்குப்போய் பால், நெய், தயிர், பஞ்சமிர்தம், இளநீர், இன்னும் எத்தனையோ அபிஷேகம் தேவையா? என ஆதங்கப்பட்டதுண்டு.
முற்காலத்தில் தமிழகத்தைப்பொறுத்தவரையில் கோயில் (கோ=அரசன், இல்= இருப்பிடம்) இறைவன் (இறை=வரி,வரிவிதிப்பவன்) என்ற அளவிலே சமுதாயக் கூடமாகவும் தானியங்களிச் சேர்த்துவைக்கும் இடமாகவும் இருந்துவந்துள்ளது. (பிற்காலத்தில் தலைகீழாகிவிட்டது).
உள்ளோர் பலர் மனமுவந்து அன்னதானம் செய்துள்ளனர். அரசர்கள் ஊட்டுப்பாறை போன்ற காரியங்களையும் செய்துள்ளார்கள்.ஆனால் இவை எல்லா தரப்பினருக்கும் கிடைத்ததென்றால் அதுதான் இல்லை.
சரி நாம் விவாதப்பொருளுக்கு வருவோம்.
சாப்பாடு கொடு என்றால் கொடுத்துவிடுவார்கள். ஆனால் "Creamy layer" எனப்படுகிற சமுதாயத்தின் அப்போதைய மேல்குடி மக்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய, பஞ்சமிர்தம்(மூலப்பொருள்கள் யாவை?)போன்ற பொருளை தானம் செய் என்றால் செய்வார்களா?
ஆனால் கடவுளின் பெயரைச் சொல்லிக் கேட்டால் உலோபி கூட கொடுத்துவிடுவான்.
அப்படித்தான் பொருட்கள் இறைவனுக்குச் சாத்தப்பட்டு, மக்களுக்கு போய் சேர வழிவகுத்ததாகவே நினைக்கிறேன்.
சரி, திருச்சாத்து(தர்ம அடி அல்ல) முடிந்தவுடன் அனைத்தும் வீணாகிவிடுமே. அதனால்தான் சாத்து மிகுபொருட்களை கோயில் பூசாரியின் உதவியாளர் வைத்திருப்பார். வேண்டுவோர்(?), தான் வந்திருப்பதை அறிவிக்கவே அந்த கைசொடுக்கும் பழக்கம்.(காதுகேளாச் சாமி சிவனடியார் சண்டிகேசுவர் அல்ல, உள்ளே? இருக்கும் நம் உதவியாளர்தான்).
சரி, சண்டிகேசுவர் இங்கெப்படி வந்தார்?
அப்படி வேண்டுவோர், கைசொடக்குப் போட்டு, சாப்பிடும்போது யாராவது பார்த்துவிட்டால்?
நமக்குத்தான் மானம் முக்கியமாயிற்றே? நம் மானத்தைக் காக்கவே சண்டிகேசுவர் இருக்கிறார்.
இதைதான் பூங்குழலியார் சொல்கிறார்....(சற்று தலைக்கணமோ?)
ஈயென விரத்த லிழிவெனத் தேர்ந்துச்
சேயென நின்றநம் மக்களுக் கபயம்
சண்டி கேசுவரின் மென்கரமே! மக்கட்
தொண்டு மகேசன் தொண்டே யாமென்.
(நிலைமண்டில் ஆசிரியப்பா, தளை தட்டிற்றா? ஆமென்றால் என் தலையை தட்டவும்.)
சண்டிகேசுவரின் பெயரையும், மற்ற விளக்கங்களையும் கொடுத்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி.
எனக்கு எந்த ஆகம விதிகளைப்பற்றியும் தெரியாது.
எனது இந்தப் புரிதல் சரியா?
நன்றி.
பூங்குழலி
4 பின்னூட்டங்கள்:
ஒரு மனிதனை இன்னொரு மனிதனுக்கு உதவி செய்ய வைப்பதற்காகவே கடவுள் படைக்கப் பட்டார் என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு. உண்மைகள் தெளிவாகும் போது ஊடகங்கள் தேவையில்லை என்பதென் கருத்து. சொல்ல வந்த செய்தி அருமை. வாழ்த்துகள்.
சுகா
நன்றி சுகா அவர்களே..
தனிமனித ஒழுக்கமும், சமுதாய ஒழுக்கமும் சில கட்டுக்கதைகளை அடிப்படையாக வைத்தே சொல்லப்பட்டன.
இருட்டைக் கண்டு பயந்த மனிதன் சூரியனை போற்றத்தொடங்கினான். இதுகுறித்த ஒரு கதையொன்று நினைவுக்கு வருகின்றது, பிறகு எழுதுகிறேன்.
சிறப்பான சிந்தனையும் அழகான தமிழ்நடையும் அருமை.வாழ்த்துக்கள்.
ஆதரவுக்கு நன்றி திரு. மணியன் அவர்களே.
நன்றி,
பூங்குழலி
Post a Comment