அந்த மாநாடும், இந்த குழப்பமும்

இதற்கண் , இந்தப் பதிவு

//பாரதிக்கு தாசன்கள் மட்டுமே வர முடியும். ஆனால் பாரதி வர முடியாது. //

இதை அவர்கள் பாவேந்தரைப் நினைத்து கேட்டார்களா எனத் தெரியவில்லை.
ஆனாலும் பெயரில் என்ன இருக்கிறது என்று எண்ணியோ, அல்லது அதன் முழு அர்த்ததையும் உணர்ந்தவர்கள் அடுத்த பத்தியை தவிர்த்துவிடலாம்...

சாதி இந்துக்களின் பெயர் சூட்டும் முறை...

பிராமணனுக்கு மங்களம், சத்ரியனுக்கு பலம், வைசியனுக்கு செல்வம், சூத்திரனுக்கு அவன் அடிமை நிலை தோன்றும் பெயர்களைச் சூட்டவேண்டும்.

பிராமணன் சர்மா எனும் மேன்மையைக் குறிக்கும் (பெயரில் மட்டும்), சத்ரியன் வர்மா எனும் பயத்தைக் குறிக்கும் பெயரையும், வைசியன் பூபதி எனும் வளத்தைக் குறிக்கும் பெயரையும், சூத்திரன் தாஸ் என்னும் தன் அடிமை பணியைக்குறிக்கும் பெயரையும் தன் பெயர்களுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அவர் சொன்னதின் அர்த்தம் என்ன என்பதை உங்களின் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.

//அங்கு 10 வீடுகளுக்குப் போனேன். மூன்று வீடுகளில் பிராமண பெண்கள் மீன் கழுவிக் கொண்டிருந்தார்கள்//


மீன் கழுவுவதை அவர் பார்த்து மிகத் துயர் உற்றார் எனச் சொல்லியிருகிறார். அவர் துன்பத்தில் நானும் பங்குகொள்கிறேன்.
பிராமண உனவு பற்றி ஏற்கனவே தெரிந்தவர்கள் அடுத்த பத்தியை தவிர்த்துவிடலாம்.

பிராமண உனவு:

படைப்புகள் அனைத்தும் உயிர்களுக்கு உண்வாகத் தக்கன, புல் முதலியவை மான் முதலியவற்றிற்கும், மான் முதலியவை புலி போன்றவற்றிற்கும்,யானை முதலியவை சிங்கம் முதலியவற்றிற்கும், மீதும் பிறவும் மனிதருக்கு உணவு ஆகும்.

கொல்லத்தக்கனவும், உண்ணத்தக்கனவும், படைத்தவர் பிரம்மா. ஆகவே நியதிப்படி, அன்றாடம் கொன்று தின்றாலும் பாவம் ஆகாது.
எனினும், யாகத்தில் மீதியான புலாலைஉண்பது தெய்வீகச் செயல். தம் இச்சையாய் கொன்று உண்பது ராட்சசச் செயல்.

இப்போது புரிந்திருக்குமே தெய்வங்கள் யார், ராட்சசர்கள் யார் என்று..
(பின் எப்போது இவர்கள் மரக்கறி உண்ணலானார்கள்? புத்தர் விஷ்னுவின் அவதாரமா என்ற பதிவிலே விளக்கமாகக் காண்போம்)


இப்போது தெரியுமே உரிமை இழந்த அவரின் மன வேதனை நியாயமானதுதானே...


தற்போது சமுதாயத்தில் உண்மையிலேயே சிறந்த பங்களிப்பை செய்து நற்பேறு பெற்றவர்களின் கருத்துகளைப் பற்றி எனது சந்தேகங்கள்.

பாரதி போன்று சிறந்த கவி யாரும் இல்லை. நிச்சயம் அவரும் சிறந்த கவிகளில் ஒருவர். இந்த கருத்தில் நானும் அவர்கள் கட்சி.
ஆனால் அவர் சொன்ன பாரதி இவரா?


செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலா மென்றே எண்ணி யிருப்பார்
பித்த மனிதர், அவர் சொலுஞ் சாத்திரம்
பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்..
//சங்க காலத்தில் மிகச் சிறந்த புலவரான கபிலர் பிராமணர்;//
(இதற்கு ஆதாரம் எனக்கு அன்பர்கள் கொடுத்தால் மகிழ்வேன்.)

பார்ப்பன மாந்தர்காள்; பகர்வது கேண்மின்
நால்வகை சாதியை இந்நாட்டினில் நாட்டினீர்
காற்றும் சிலரைக் கடிந்து வீசுமோ?
மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ?


இவர்கள் சொன்ன பாரதி மற்றும் கபிலர் இவர்கள்தானா? அல்லது அடுத்தாத்து அம்பிகளா?


நிச்சயமாக இந்த ஒழுக்கசீலர்கள் சொன்னது சோமபான உளரல் இல்லை.அவர் நன்கு கற்றறிந்தவர் ஆனால் எதைப்படித்துவிட்டு அவர் சொன்னார் என்றால்..

அச்வத்த: ஸர்வவ் ருக்ஷாணாம் தேவர் ஷீணாஞ் ச் நாரத:
கந்தர் வாணாம் சித்ரரத்: ஸித்தானாம் கபிலோ முனி:


"எல்லா மரங்களுக்குள் அரசமரம் நான் (புத்தர் ஞாபகம் வரவில்லை?). தேவரிஷிகளுக்குள் நாரதர் நான், கந்தர்வர்களுக்குள் சித்தரதனென்ற கந்தர்வன் நான், சித்தர்களுக்குள் கபில முனி நான்."

எதிர்த்து அழிக்க முடியாத எதையும் அணைத்தே அழித்துவிடும் மிகப் பெரிய பஞ்ச தந்திரங்களுள் ஒன்றைக் கையாள்வதற்காக அப்படி கூறப்பட்டுள்ளது எனத் தெரியாமல், அவர் சொல்லிவிட்டார் என்றே நினைக்கிறேன்.

இதெல்லாம் பரவாயில்லை விட்டுத்தள்ளுங்கள்..

(இங்கு, மன்னவன் சரியான பாடலுக்கு பரிசளிக்கிறான் என்றால் அதைப் பார்த்து மகிழும் முதல் ஆள் நான்" எனும் நற்கீரனின் உரையாடல்களை மனதில் நினைத்துகொள்ளவும்)

சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகியவைகளுக்கு உரை எழுதியுள்ள திரு. சுஜாதா அவர்கள் யாரோ,

"அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பிராமணன் முதற்றே உலகு"



என்ற தவறான பாடலை பாடியபோது திருத்தியிருக்கவேண்டாமா?
அவர்தான் சொந்தபந்தம், பங்காளிகள் ஆகியோரைப் பார்த்த மகிழ்ச்சியில் சொல்லிவிட்டார் என்றால், இன்று வரை அதை திருத்தி வெளியிடாதது ஏன்?

சரி பரவாயில்லை ஆசைப்பட்டுவிட்டீர்கள், நானே உங்களுக்கு உதவுகிறேன்.

"அகரமுதல எழுத்தெல்லாம் வேத
பிரம்மா முதற்றே உலகு"


அவன் தேவையில்லை, பிராமணர்களே முக்கியம் என்றால்.

"அகரமுதல எழுத்தெல்லாம் வேத/ஆதி
பனவன் முதற்றே உலகு"



கலிங்கத்துப் பரணி படிக்காத காரிருள் இல்லை நீங்கள்.
உங்களுக்கு பனவன் என்றால் பிராமணன் என்று தெரியும் என்று நம்புகிறேன்.

மற்றபடி அந்த பாரதி, கபிலர் ஆகியோர் நான் சொன்னவர்களா அல்லது வேறு மனிதர்களா என்று சொன்னால் மகிழ்வேன்.

இப்படிக்கு,
நிரம்பிய சந்தேகங்களுடன்,
பூங்குழலி

எதை நோக்கிப் போகிறோம்?

இளைஞர்கள் கேள்விகேட்கும்போது, பெரும்பாலும் அது அப்படித்தான், இவையெல்லாம் ஆராயக்கூடாது, அனுபவிக்கவேண்டும் என்ற ரீதியில் பெரியவர்கள் பதில் கூறிக்கொண்டு இருக்கின்றனர்.

ஒருவரேனும், "அது மனிதன் காட்டுமிராண்டிகளாய் இருந்தபோது எழுதப்பட்டது, அதில் சில தற்காலத்திற்கு ஒவ்வாதவை அல்லது நீ நினைக்கிற மாதிரியில்லை, அதன் உண்மைப்பொருள் இதுவே" என ஐயத்திற்கு இடமின்றி விளக்கவேண்டும்.

ஆனால் இங்கே தற்போது நடந்துகொண்டிருப்பது என்ன?

"எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்" என்ற சொற்றொடரை கேள்வி/சந்தேகம் கேட்டவனின் மீது மட்டும் மெய்ப்பொருள் காணச் சொல்கிறார்கள்.

"சாத்தான் வேதம் ஓதுகிறது" என்ற சொலவடை ஞாபகத்திற்கு வந்தாலும், இதைச் சொல்லி யார் மனதையும் புண்படுத்த விரும்பவில்லை.

இன்னும் சில நேரங்களிலே,

"அன்பரே, இன்றைய பொழுது, உங்களின் வாழ்க்கையின் மிகமுக்கியமானது.உங்களின் தொழில்முறை அறிவை/அனுபவத்தை பெருக்கிக்கொள்ளுங்கள், இது போன்ற பதிவுகள் எழுத மற்றவர்கள் இருக்கிறார்கள்..." என்று அன்பரின் எதிர்காலத்தைப் பற்றிய அச்சுறுத்தல் கணையைத் தொடுக்கிறார்கள்..

யாருக்குத்தான் எதிர்காலத்தைப்பற்றிய உணர்வு இல்லை? அல்லது இது மாதிரி எழுத தனியாக கொம்பு முளைத்தவர்கள் இருக்கிறார்களா?

"நீங்கள் இதுமாதிரி எழுதுவீர்கள் என கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. நிச்சயம் நாம் அனைவரும் மற்றவரின் கனவு எதிர்பார்ப்புகளுக்கு ஒத்து வாழவேண்டும்" என்ற ரீதியில் உத்வேகத்தினைக் குறைக்கும் அன்புச் சுரண்டல்கள்..

"எல்லாம் தெரிந்தமாதிரி பேசாதே.., இதுக்கெல்லாம் உனக்கு அனுபவம் பத்தாது.." என அடக்கு முறைகள்.

"பொம்பளையாளுக்கு ஸ்லோகமெல்லாம் தெரியனுமா?, சித்த சும்மா இருடீ". நாச்சுட்ட வடுக்களுடன் என் மனம்...

நிச்சயம், எல்லாம் தெரிந்தவர்கள் உலகில் யாரும் இல்லை. எந்த அகவையில் இருந்தாலும் கற்றது கை மண்ணளவு..


"பதிவைப் போடும் முன் நன்றாகப் படித்துவிட்டு போடவும்../என்ன ராசா இப்படி பண்ணிட்டியே?..." எனச் சொல்ல பெரியவர்களுக்கு எத்தனை உரிமையிருக்கின்றதோ.. அப்படி கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அல்லது விளக்கம் சொல்ல வேண்டிய கடமையும் உள்ளது.

கடமைகளை தட்டிக்கழிக்கின்ற சமுகத்தில் கண்ணியமும், கட்டுப்பாடும் இருக்காது..

(எப்படியோ, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு பற்றி எழுதியாகிவிட்டது..)

நடக்கப் பழகும் குழந்தையை, ஓடத்தெரிந்தவர்கள் எள்ளி நகையாடும் செயல்களும் நிகழ்கின்றன..

கனியிருப்பக் காய்கவர்ந்தால்...

இந்தியத் திருநாட்டில் என்ன நடந்துகொண்டிருக்கிறது?

இளைஞர்களுக்கு காயடிக்கும் வேலையை தவறாமல் தெரிந்தோ தெரியாமலோ செய்துகொண்டிருக்கிறார்கள்.

அரசியல்வாதிகளும், சமய குருமார்களும், 22 வயதிற்குமேலும் பிள்ளைகளை தன்னுடனே வைத்து குல விந்துவை பெறுக்கும் பெற்றோர்களும், நற்காரியத்தை தவறாமல் செய்கிறார்கள்.

முத்தமிழ் வித்தகரின் கட்சியில், 50 வயதுக்கு மேல் உள்ள முதுகுமரன் இளைஞர் அணி தலைவர்.

திறம்பட ஆட்சி நடத்தும் (ஜெயா டிவியில்) மற்றொரு பகுத்தறிவுக் கட்சியிலும், குடிதாங்கிகளின் கட்சியிலும், சீமான் வீட்டுக் கன்றுக்குட்டி இருக்கும் கட்சியிலும், இளைஞர் அணி, மாணவரணி என்பன பற்றி மூச்சே காணோம்.

அல்லது ஊடகங்கள் இந்த நற்காரியத்தை செய்கின்றன..

இவ்வளவு மக்கட் தொகை கொண்ட நாட்டில் மாணவர்களின் பலம் ஆண்மையிழந்துப் போய், சோற்றாலடித்த பிண்டமாகக் கிடக்கின்றனர்.

இளைஞர்களின் கேள்வி வேள்வியை ஆதரிக்காமல் அதை எதிர்க்கும் பெரியவர்களின் மேல் எனக்கு எந்த கோபமும் இல்லை. அவர்களும் இளைஞர்களாய் இருந்தபோது இந்த நற்காரியத்தை செய்து விடப்பட்டவர்கள் தானே..

"இந்தப் புளுகு ஸ்கந்த புராணத்திலும் இல்லை" என்ற சொலவடையை வைத்திருக்கும் நாம்
இப்படியே விட்டுவிட்டால் வருங்கால சந்ததியினர் நம்மையும் சேர்த்து காறித்துப்பக் கூடும்.
நம் காலத்திலாவது புரட்சி ஓங்கட்டும்.

சுய சிந்தனையுடைய இளைஞர்கள் உருவாகட்டும்.தந்தையின் குலவிந்தினைப் பெருக்குவதிலும், கனவனுக்கு சந்ததியினை பெற்றுத்தரும் இயந்திரமாய் இருப்பதையும் விட்டுவிட்டு புதிய இந்தியாவைப் படைப்போம்.

"எனக்கு உத்வேகமுள்ள, சுயசிந்தனையுடைய 100 இளைஞர்களைக் கொடுங்கள். நான் நாட்டை புரட்டிக்காட்டுகிறேன்"

எனக் கேட்ட விவேகானந்தனின் பிறந்தாநாளான இன்று(JAN- 12)..

தேசிய இளைஞர் நாள்..

நன்றி,
பூங்குழலி

(பி.கு விதிவிலக்குகள் கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை)

திருக்குறள் அசைவமா?

திருக்குறள் சைவமா? என்று கேட்டாலும் கேட்டேன்,(இன்னும் பதில் பதிவையே கானோம்?), நான் என்னவோ சைவ

சித்தாந்தத்திற்கு எதிரானவள் என்றும்,
திருக்குறள் சைவமாய் இருப்பதை இவள் விரும்பவில்லை எனவும்
மற்றவர்கள் தவறாய் நினைக்கும் தொனியில் பின்னூட்டங்கள் வந்தன...

வைணவச் சார்பு கொண்டேனோ எனவும் சிலர் ஐயுறலாம்...

தன்னை நடுநிலையாராகக் காட்டிக்கொள்வதில் யாருக்குமே ஓர் அலாதி விருப்பம் இருக்கும். நான் மட்டும் விதிவிலக்கா என்ன?

அதற்கண் இந்தப் பதிவு...




திருவள்ளுவர் தாம் இரண்டாயிரமெனும்
ஆண்டின்முன் குறளை அளித்தார் என்பர்
ஆயிரத்தெ ழுநூ றாண்டுகள் கழிந்த்ப்பின்
பரிமேலழகர் உரைசெய் துள்ளார்
என்பதும் நினைவில் இருத்தல் வேண்டும்


பரிமே லழகர் உரையோ வள்ளுவர்
திருவுள்ளத்தின் திரையே ஆனது!
நிறவேறு பாட்டை அறவே ஒதுக்கிய
தமிழ்த்திரு வள்ளுவர் அமிழ்தக் கொள்கையை
நஞ்சென்று நாட்டினார் பரிமேலழகர்


பழந்தமிழ் நாட்டின் பண்பே பண்பென
அன்னார் ஆய்ந்த அறமே அறமென
ஒழுக்கமே ஒழுக்க விலக்கணம் ஆமென
வள்ளுவர் நாட்டினார் தெள்ளு தமிழர்
சீர்த்தியை திறம்பட எடுத்துக் காட்டினார்

பரிமே லழகர் செய்த உரையில்...
தமிழரைக் காணுமா றில்லை.. தமிழரின்
எதிர்புறத் துள்ள இனத்தார் மேன்மையின்
செருகலே கண்டோம்.

வடநூல் கொண்டே வள்ளுவர் குறளை
இயற்றினார் என்ற எண்ன மேற்படும்படி
உரைசெய் துள்ளார் பரிமே லழகர்
எடுத்துக் காட்டொண் றியம்பு கின்றேன்;

"ஒழுக்கமுடைமை, குடிமை" என்பதற்கு
உரைசொல் கின்றார் பரிமே லழகர்
"தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும்
ஓதப் பட்ட ஒழுக்கந் தன்னை
உடையராதல்"-
உரைதானா இது?
"ஒழுக்க முடைமை உயர்தமிழ்க் குடிகளின்
தன்மை யுடையராதல்"
- தகும் இது;

குடிமை என்பது குடிகளின் தன்மையே!
"வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப் பிரிதல் இல்"
எனப் பகர்ந்ததில்
பழங்குடி குறித்த பாங்கும் அறிக..

நன்றாயம் நவில வந்ததென் எனில்
திருவள்ளுவரின் திருக்குறள் தன்னைக்
கசடறக் கற்க; கற்றே
இசையொடு தமிழ் இனிது வாழ்கவே


அன்பர்களே,
இது என்னுடைய கருத்து அல்ல...
நம் புரச்சித் தலைவர் மன்னிக்கவும்,
புரட்சிக் கவிஞரின் பாட்டு இது.


வசவுகளை எனக்கும், பாராட்டுதல்களைப் புரட்சிக் கவிஞருக்கும் அனுப்பவும்.

பொறுமைக்கு நன்றி,
பூங்குழலி.

உங்கள் மனைவிக்கு நீங்கள் எத்தனையாவது கணவன் -- பதில்

பதிவுக்கு மிக்க (நன்றிக்கு எதிர்பதத்தைப் போட்டுக்கொள்ளவும்) முத்துக்குமரன்.

முதலில், தலைப்பை பற்றி ஒரு கருத்து.
நீங்கள் இதை கணக்குப் பாடம் என்று நினைத்து விட்டீர்களா?

நீங்கள் அப்படி எண்ண முயன்றால் அது ஒரு முடிவிலி.

///அந்தக் காலத்தில் பெண் குழந்தைகளுக்கு வயதுக்கு வந்தவுடன் திருமணம் செய்துவிடும் வழக்கம் இருந்தது. அந்த வழக்கத்திற்கும் காரணங்கள் இருந்தன. அதைக் "குழந்தைத் திருமணம்" என்று எப்படியெப்படியோ திரித்து எதிர்த்து அக்காலத்தில் பெண்குழந்தை பிறந்ததும் திருமணம் செய்துவைத்து விடுவார்கள் என்ற அளவிற்குக்
கொண்டுபோனார்கள்.///



குழந்தைத் திருமணம் என்பதை தற்போதுள்ளவர்கள் திரித்துக் கூறுகிறார்கள்.
உண்மைதான் இப்பதிவைப் பார்க்கவும்.

(இது ஏதோ வரலாறு என நினைத்துவிடவேண்டாம்.
நீங்கள் அகவை 60 க்கு மேல் இருந்தால் அது உங்கள் அப்பாவின் காலம்.
அதற்கு கீழே என்றால் உங்கள் பாட்டனார், முப்பாட்டனார் காலம்.)


//ஏன் வயதுவந்தவுடன் திருமணம் செய்துவிடும் பழக்கம் வந்தது என்ற காரணங்களுக்குள் போகவேண்டாம் (இன்னும் சில விவகாரங்களுக்குள் போகவேண்டி வரும் என்பதால்). //

தயவு செய்து காரணங்களுக்குள் போகவேண்டாம்.
எனது வாயை பிடுங்கவேண்டாம்.


மிகக் குறுகிய வட்டத்திற்குள் கிணற்றுத்தவளையாய் இருக்காதீர்கள் முத்துக்குமரன்.

முன்காலத்தில் இந்தக் கடவுளர்+ கணக்கிலடங்கா கிண்ணர்கள், கிம்புருடர்கள் + கோடானு கோடி தேவர்கள் இவர்கள் மட்டுமன்றி மணமகனுக்கு முன்பே புரோகிதரும் தன் பங்குக்கு ஒரு தாலி கட்டிக் கொள்வார்.

கடைசியில் தான் மணமகன்.

பிறகு தாலிக்குப் பதில் காப்பு என்ற பெயரிலே கட்டினார்கள், தற்போது பரவாயில்லை மணமகனை விட்டு கட்டச்சொல்கிறார்கள்.

இவர்கள் அனைவரையும் எத்தனை என்று உங்களால் சொல்ல முடியுமா?

//இதில் வரும் தெய்வங்களும் அவர்களுடன் பெண்ணுக்குச் சொல்லப்படும் உறவும் உருவகம் தான். அது உடல் உறவு அல்ல. அதனை இந்தக் காலத்தில் நாம் 'அடைந்தேன்' என்னும் சொல்லுக்கு கூறும் 'தாம்பத்ய உறவு' என்று பொருள் கொண்டு விதண்டாவாதம் புரிவது பொருத்தமற்றது. ////

நிச்சயம் இவர்களில் யாரும் பெண்ணுடன் உடல் ரீதியாக தொடர்பு கொள்ளவில்லை.

முத்துக்குமரன் உங்களுக்குக் கூட மாற்றான் மனைவியை உங்களுக்குப் பிடித்தமாதிரி உருவகப்படுத்திக்கொண்டு அதை அவள் கனவனிடமும் சொல்லிக் கொள்ள முழு உரிமை உண்டு.

(பாருங்கள் இதில் எந்த இடத்திலும் பெண்கள் சம்பந்தப்படவில்லை.)

//For your age, you might not have seen enough to talk about these mantra. Focus your energies in getting your professional skills up. You are in the prime time in your career//

மற்றபடி, இந்த வயது முக்கியமான காரியங்களைச் செய்யும் வயது. ஆகவே நேரத்தை வீணடிக்காமல் ஏதாவது ஒரு வங்கியில் போட்டு சேமிக்கவும்.

(பி.கு: இந்த பதிவு ஒரு அவசரப் பதிவு, தற்போதைக்கு ஆதாரம் கொடுக்க என்னிடம் எந்த உரலும் இல்லை. ஆகவே வீடு(வூடு? நன்றி:முத்து) கட்டிக்கொள்ள விரும்புவர்கள் கட்டிக்கொள்ளலாம். ஆதாரத்துடன் நான் மீண்டும் சந்திக்கிறேன்.)


தமிழ்மணத்தில் இருக்கும் ஒரு சாக்கடை கும்பலில்? இருந்து,
பூங்குழலி

இசைத்தமிழ்?

இசையின் சுரங்களை கொண்ட நிறைய சொற்கள் தமிழில் உள்ளன என்றே நினைக்கிறேன்.

இது ஒரு ஆர்வக்கோளாறான பதிப்பாகவும் இருக்கலாம்.



கரிமாரி காப்பா(ள்), பரிதாப பாப்பா
சரிசரி மாமா பதநீ(ர்) சரிக;
தபசணி தாத்தா, சரிசம மாக
கபமறி கா!பத நீ!தா!



"பரிகாச மாமா" என்று போடவும் ஆசை. :-))

நன்றி,
பூங்குழலி

திருக்குறள் சைவமா? - சன் டிவி வணக்கம் தமிழகம்.

ஒரு வேண்டுகோள்.

// நான் விரும்புவது, சைவம் சார்ந்த கருத்துக்களை, திருக்குறளில் இருந்து எடுத்தாண்டு சொல்லும் ஒரு இனிய பதிவையே. //

****இது கண்டிப்பாக முடியக் கூடியதே. நமது தமிழ்மணத்தில் இது தொடர்பான வேண்டுகோளை வையுங்களேன்.

ஏனென்றால் இந்தப் பதிவு வேண்டுகோள் வடிவிலோ, ஆவல் வடிவிலோ இல்லை என்பது என் கருத்து.****


அன்பர் சொல்லியவிதமே இதை வேண்டுகோளாக மாற்றிக்கொண்டேன்.

ஒருபக்கப் பார்வையாக மட்டுமே இல்லாது, விவாதத்தை ஏற்றுக்கொண்டு அதை விளக்கவும் செய்யும் பதிவை வேண்டுகிறேன்.

நன்றி.


இன்றைய வணக்கம் தமிழகம்(02-JAN-2006) நிகழ்ச்சியில்
திரு கு.வைத்யநாதன் ( திருவாடுதுறை சைவசித்தாந்த
நேர்முகப் பயிற்சி மையம்) அவர்கள்
திருக்குறளில் சொல்லியுள்ளது சைவ சித்தாந்தமே என்று
சொல்லி அதற்கு சில குறள்களையும் (குறிப்பாக எண்குணங்களைப்பற்றி)
எடுத்துக்கூறினார்.

அந்நிகழ்ச்சி விவாதத்திற்கு இடம்தராத, ஒருவரே தனது
அனுபவத்தை/தகவல்களை மற்றவருக்கு சொல்லும்படியான
நிகழ்ச்சியாகும்.

ஏற்கனவே, புத்தர் விஷ்னுவின் அவதாரமா? என்ற
எனது குழப்பத்தைத் தெளிய முயலும் வேளையில்
இன்று மேலும் ஒரு குழப்பத்தை சேர்த்துவிட்டார்.

விவாதம் மேற்கொள்ளாது, ஒரு கருத்தினை
ஏற்றுக்கொள்ளுவது சரியான செயல் அல்ல.

ஆகவே தமிழ்மண அன்பர்கள் யாரேனும் குறள்/சைவம்,
சைவர்கள் எப்போது சைவரானார்கள் போன்ற
கருத்தை விவாதப் பொருளாக கருதி, மற்ற தமிழன்பர்கள்
தெளிவுபெற உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

புத்தர்/அவதாரம் பற்றிய செய்திகளுடன், உண்மைக்கருத்துக்களை சொல்லிட விரைவில் வருகிறேன்.

நன்றி.
பூங்குழலி.