எதை நோக்கிப் போகிறோம்?

இளைஞர்கள் கேள்விகேட்கும்போது, பெரும்பாலும் அது அப்படித்தான், இவையெல்லாம் ஆராயக்கூடாது, அனுபவிக்கவேண்டும் என்ற ரீதியில் பெரியவர்கள் பதில் கூறிக்கொண்டு இருக்கின்றனர்.

ஒருவரேனும், "அது மனிதன் காட்டுமிராண்டிகளாய் இருந்தபோது எழுதப்பட்டது, அதில் சில தற்காலத்திற்கு ஒவ்வாதவை அல்லது நீ நினைக்கிற மாதிரியில்லை, அதன் உண்மைப்பொருள் இதுவே" என ஐயத்திற்கு இடமின்றி விளக்கவேண்டும்.

ஆனால் இங்கே தற்போது நடந்துகொண்டிருப்பது என்ன?

"எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்" என்ற சொற்றொடரை கேள்வி/சந்தேகம் கேட்டவனின் மீது மட்டும் மெய்ப்பொருள் காணச் சொல்கிறார்கள்.

"சாத்தான் வேதம் ஓதுகிறது" என்ற சொலவடை ஞாபகத்திற்கு வந்தாலும், இதைச் சொல்லி யார் மனதையும் புண்படுத்த விரும்பவில்லை.

இன்னும் சில நேரங்களிலே,

"அன்பரே, இன்றைய பொழுது, உங்களின் வாழ்க்கையின் மிகமுக்கியமானது.உங்களின் தொழில்முறை அறிவை/அனுபவத்தை பெருக்கிக்கொள்ளுங்கள், இது போன்ற பதிவுகள் எழுத மற்றவர்கள் இருக்கிறார்கள்..." என்று அன்பரின் எதிர்காலத்தைப் பற்றிய அச்சுறுத்தல் கணையைத் தொடுக்கிறார்கள்..

யாருக்குத்தான் எதிர்காலத்தைப்பற்றிய உணர்வு இல்லை? அல்லது இது மாதிரி எழுத தனியாக கொம்பு முளைத்தவர்கள் இருக்கிறார்களா?

"நீங்கள் இதுமாதிரி எழுதுவீர்கள் என கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. நிச்சயம் நாம் அனைவரும் மற்றவரின் கனவு எதிர்பார்ப்புகளுக்கு ஒத்து வாழவேண்டும்" என்ற ரீதியில் உத்வேகத்தினைக் குறைக்கும் அன்புச் சுரண்டல்கள்..

"எல்லாம் தெரிந்தமாதிரி பேசாதே.., இதுக்கெல்லாம் உனக்கு அனுபவம் பத்தாது.." என அடக்கு முறைகள்.

"பொம்பளையாளுக்கு ஸ்லோகமெல்லாம் தெரியனுமா?, சித்த சும்மா இருடீ". நாச்சுட்ட வடுக்களுடன் என் மனம்...

நிச்சயம், எல்லாம் தெரிந்தவர்கள் உலகில் யாரும் இல்லை. எந்த அகவையில் இருந்தாலும் கற்றது கை மண்ணளவு..


"பதிவைப் போடும் முன் நன்றாகப் படித்துவிட்டு போடவும்../என்ன ராசா இப்படி பண்ணிட்டியே?..." எனச் சொல்ல பெரியவர்களுக்கு எத்தனை உரிமையிருக்கின்றதோ.. அப்படி கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அல்லது விளக்கம் சொல்ல வேண்டிய கடமையும் உள்ளது.

கடமைகளை தட்டிக்கழிக்கின்ற சமுகத்தில் கண்ணியமும், கட்டுப்பாடும் இருக்காது..

(எப்படியோ, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு பற்றி எழுதியாகிவிட்டது..)

நடக்கப் பழகும் குழந்தையை, ஓடத்தெரிந்தவர்கள் எள்ளி நகையாடும் செயல்களும் நிகழ்கின்றன..

கனியிருப்பக் காய்கவர்ந்தால்...

இந்தியத் திருநாட்டில் என்ன நடந்துகொண்டிருக்கிறது?

இளைஞர்களுக்கு காயடிக்கும் வேலையை தவறாமல் தெரிந்தோ தெரியாமலோ செய்துகொண்டிருக்கிறார்கள்.

அரசியல்வாதிகளும், சமய குருமார்களும், 22 வயதிற்குமேலும் பிள்ளைகளை தன்னுடனே வைத்து குல விந்துவை பெறுக்கும் பெற்றோர்களும், நற்காரியத்தை தவறாமல் செய்கிறார்கள்.

முத்தமிழ் வித்தகரின் கட்சியில், 50 வயதுக்கு மேல் உள்ள முதுகுமரன் இளைஞர் அணி தலைவர்.

திறம்பட ஆட்சி நடத்தும் (ஜெயா டிவியில்) மற்றொரு பகுத்தறிவுக் கட்சியிலும், குடிதாங்கிகளின் கட்சியிலும், சீமான் வீட்டுக் கன்றுக்குட்டி இருக்கும் கட்சியிலும், இளைஞர் அணி, மாணவரணி என்பன பற்றி மூச்சே காணோம்.

அல்லது ஊடகங்கள் இந்த நற்காரியத்தை செய்கின்றன..

இவ்வளவு மக்கட் தொகை கொண்ட நாட்டில் மாணவர்களின் பலம் ஆண்மையிழந்துப் போய், சோற்றாலடித்த பிண்டமாகக் கிடக்கின்றனர்.

இளைஞர்களின் கேள்வி வேள்வியை ஆதரிக்காமல் அதை எதிர்க்கும் பெரியவர்களின் மேல் எனக்கு எந்த கோபமும் இல்லை. அவர்களும் இளைஞர்களாய் இருந்தபோது இந்த நற்காரியத்தை செய்து விடப்பட்டவர்கள் தானே..

"இந்தப் புளுகு ஸ்கந்த புராணத்திலும் இல்லை" என்ற சொலவடையை வைத்திருக்கும் நாம்
இப்படியே விட்டுவிட்டால் வருங்கால சந்ததியினர் நம்மையும் சேர்த்து காறித்துப்பக் கூடும்.
நம் காலத்திலாவது புரட்சி ஓங்கட்டும்.

சுய சிந்தனையுடைய இளைஞர்கள் உருவாகட்டும்.தந்தையின் குலவிந்தினைப் பெருக்குவதிலும், கனவனுக்கு சந்ததியினை பெற்றுத்தரும் இயந்திரமாய் இருப்பதையும் விட்டுவிட்டு புதிய இந்தியாவைப் படைப்போம்.

"எனக்கு உத்வேகமுள்ள, சுயசிந்தனையுடைய 100 இளைஞர்களைக் கொடுங்கள். நான் நாட்டை புரட்டிக்காட்டுகிறேன்"

எனக் கேட்ட விவேகானந்தனின் பிறந்தாநாளான இன்று(JAN- 12)..

தேசிய இளைஞர் நாள்..

நன்றி,
பூங்குழலி

(பி.கு விதிவிலக்குகள் கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை)

6 பின்னூட்டங்கள்:

அருள் குமார் said...

சிந்திக்க வைக்கிற பதிவு.

நாங்கள் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது மணிசங்கர் அய்யர் ஒரு விழாவிற்கு

பேச வந்திருந்தார். அப்போது அவர் சொன்ன ஒரு விஷயம் நினைவிற்கு வருகிறது.

"இப்போது உங்கள் கல்லூரியையே எடுத்துக்கொள்ளுங்கள். முதல் மதிப்பெண்கள்

வாங்குகிற மாணவர்கள் மேற்படிப்பிற்கோ அல்லது வேலைக்கோ வெளிநாடு செல்ல

முற்படுவார்கள். நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள் நல்ல MNC

கம்பெனிகளில் சேர்ந்து விருகிறார்கள். அதற்கு அடுத்த நிலையில், மரியாதையான

நல்ல வேலையில் அமர முற்படுகிறார்கள். கல்லூரி காலத்திலேயே அடாவடி

செய்துகொண்டு படிக்காமல் தேர்வில் தோல்வியுறும் மாணவர்களே அரசியலுக்கு

வருகிறார்கள். இப்படித்தான் பல தலைமுறையாக நடந்துவறுகிறது. அதனால் அரசியல்

நம்நாட்டில் இப்படித்தான் இருக்கும். எப்போது கல்லூரியில் முதல் மாணவர்களாக

திகழ்பவர்கள் அரசியலுக்கு வருகிறார்களோ அன்றுதான் அரசியல் நன்றாக இருக்கும்"

என்பதாக சொன்னார். நிச்சயம் ஒத்துக்கொள்ள வேண்டிய ஒன்று.

இதே விஷயத்தை மதன் தன் கார்டூனில் விளையாட்டாக சொல்லியிருப்பார். ஒரு

அரசியல் வாதி மைக் பிடித்து ஆவேசமாக பேசிக்கொண்டிருப்பார்...

"மாணவர்களே..! தயவுசெய்து அரசியலில் தலையிடாதீர்கள். நாங்கள் என்றைக்காவது

படிப்பில் தலையிட்டிருக்கிறோமா..?!"

மேலோட்டமாக சிரிக்க வைத்த இந்தா கார்டூன், கொஞ்சம் யோசித்தால் serious

ஆக்கிவிடுகிறது!


Muthu said...

இது சரிதான்..அதனால் தான் மாணவர் சக்தி என்றெல்லாம் வீர வசனம் பேசப்படும் படங்களை பார்த்தால் சிரிப்பு வருகிறது...


பூங்குழலி said...

கருத்துக்களுக்கு நன்றி திரு. அருள்குமார்.

அந்த மதன் கேலிச்சித்திரத்தை நானும் பார்த்திருக்கிறேன்.
அவர் மிதவாதி போலும்.

நன்றி,
பூங்குழலி.


பூங்குழலி said...

நீங்கள் சொல்வது சரிதான் தமிழினி.

மற்ற நாடுகளில் உள்ள் அளவுக்காகவாவது நாம் எதிர்பார்க்கலாம் தானே..

நன்றி,
பூங்குழலி


SnackDragon said...

//இளைஞர்களின் கேள்வி வேள்வியை ஆதரிக்காமல் அதை எதிர்க்கும் பெரியவர்களின் மேல் எனக்கு எந்த கோபமும் இல்லை. அவர்களும் இளைஞர்களாய் இருந்தபோது இந்த நற்காரியத்தை செய்து விடப்பட்டவர்கள் தானே..//
அழகாக எழுதியுள்ளீர்கள்.
உங்கள் பதிவுகளை இப்பொழுதுதான் ஒவ்வொன்றாக வாசிக்கிறேன்.


பூங்குழலி said...

ithaip pArkkavum,

http://timesofindia.indiatimes.com/articleshow/1384682.cms

wanRi,
pUngkuzhali.