திருக்குறள் அசைவமா?

திருக்குறள் சைவமா? என்று கேட்டாலும் கேட்டேன்,(இன்னும் பதில் பதிவையே கானோம்?), நான் என்னவோ சைவ

சித்தாந்தத்திற்கு எதிரானவள் என்றும்,
திருக்குறள் சைவமாய் இருப்பதை இவள் விரும்பவில்லை எனவும்
மற்றவர்கள் தவறாய் நினைக்கும் தொனியில் பின்னூட்டங்கள் வந்தன...

வைணவச் சார்பு கொண்டேனோ எனவும் சிலர் ஐயுறலாம்...

தன்னை நடுநிலையாராகக் காட்டிக்கொள்வதில் யாருக்குமே ஓர் அலாதி விருப்பம் இருக்கும். நான் மட்டும் விதிவிலக்கா என்ன?

அதற்கண் இந்தப் பதிவு...




திருவள்ளுவர் தாம் இரண்டாயிரமெனும்
ஆண்டின்முன் குறளை அளித்தார் என்பர்
ஆயிரத்தெ ழுநூ றாண்டுகள் கழிந்த்ப்பின்
பரிமேலழகர் உரைசெய் துள்ளார்
என்பதும் நினைவில் இருத்தல் வேண்டும்


பரிமே லழகர் உரையோ வள்ளுவர்
திருவுள்ளத்தின் திரையே ஆனது!
நிறவேறு பாட்டை அறவே ஒதுக்கிய
தமிழ்த்திரு வள்ளுவர் அமிழ்தக் கொள்கையை
நஞ்சென்று நாட்டினார் பரிமேலழகர்


பழந்தமிழ் நாட்டின் பண்பே பண்பென
அன்னார் ஆய்ந்த அறமே அறமென
ஒழுக்கமே ஒழுக்க விலக்கணம் ஆமென
வள்ளுவர் நாட்டினார் தெள்ளு தமிழர்
சீர்த்தியை திறம்பட எடுத்துக் காட்டினார்

பரிமே லழகர் செய்த உரையில்...
தமிழரைக் காணுமா றில்லை.. தமிழரின்
எதிர்புறத் துள்ள இனத்தார் மேன்மையின்
செருகலே கண்டோம்.

வடநூல் கொண்டே வள்ளுவர் குறளை
இயற்றினார் என்ற எண்ன மேற்படும்படி
உரைசெய் துள்ளார் பரிமே லழகர்
எடுத்துக் காட்டொண் றியம்பு கின்றேன்;

"ஒழுக்கமுடைமை, குடிமை" என்பதற்கு
உரைசொல் கின்றார் பரிமே லழகர்
"தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும்
ஓதப் பட்ட ஒழுக்கந் தன்னை
உடையராதல்"-
உரைதானா இது?
"ஒழுக்க முடைமை உயர்தமிழ்க் குடிகளின்
தன்மை யுடையராதல்"
- தகும் இது;

குடிமை என்பது குடிகளின் தன்மையே!
"வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப் பிரிதல் இல்"
எனப் பகர்ந்ததில்
பழங்குடி குறித்த பாங்கும் அறிக..

நன்றாயம் நவில வந்ததென் எனில்
திருவள்ளுவரின் திருக்குறள் தன்னைக்
கசடறக் கற்க; கற்றே
இசையொடு தமிழ் இனிது வாழ்கவே


அன்பர்களே,
இது என்னுடைய கருத்து அல்ல...
நம் புரச்சித் தலைவர் மன்னிக்கவும்,
புரட்சிக் கவிஞரின் பாட்டு இது.


வசவுகளை எனக்கும், பாராட்டுதல்களைப் புரட்சிக் கவிஞருக்கும் அனுப்பவும்.

பொறுமைக்கு நன்றி,
பூங்குழலி.

6 பின்னூட்டங்கள்:

G.Ragavan said...

பூங்குழலி, பாவேந்தரின் கருத்தே எனது கருத்தும். திருக்குறளுக்குப் பரிமேலழகர் உரை சிறந்ததன்று என்பது என் கருத்து. சில பல சொற்களுக்குப் பொருள் புரியாமல் போகலாமே ஒழிய, திருக்குறள் இன்றும் படிக்க எளியது. திருக்குறள் எந்த ஒரு வடமொழி நூலையும் பின்பற்றி எழுதப்படவில்லை என்பதில் ஐயமில்லை. ஒருவேளை இரண்டு நூல்களில் ஒரே கருத்து வருவதும் உண்டு. அப்படி ஏதேனும் நேர்ந்திருக்குமே ஒழிய, எந்த ஒரு வடமொழி நூலையும் கொண்டு திருக்குறள் எழுந்ததாகக் கருதுவது மடமையே. அதில் ஐயமேதுமில்லை. திருக்குறள் அசைவமில்லை. திருவள்ளுவரும் அசைவமில்லை.


பூங்குழலி said...

கருத்துக்கு நன்றி திரு. இராகவன்..


இளந்திரையன் said...

மிக நல்ல முயற்சி . நாம் தமிழராய்ப் பிறந்ததன் பலன் தமிழுக்குச் சேவை செய்தல்....அது முடியாவிட்டாலும் தமிழர் வாழ்வியற் பெருமைகளையாவது காக்க முயல்வது வரும் சந்ததிக்கு எம்மினத்தைப் பற்றிய பெருமையைக் கொடுக்கும்.அதனால் தமிழ் நீடு வாழும்.

-அன்புடன் இளந்திரையன்


நவீன் ப்ரகாஷ் said...

குழலி,
குறள் ஒரு உலகப்பொதுமறை.இது போன்ற விவாதங்கள் அதற்கு நாம் செய்யும் இழுக்கு எனக் கருதுகிறேன்!


பூங்குழலி said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு. நவீன் பிரகாஷ் அவர்களே,


உலகப்பொதுமறை என்று நாம் மட்டுமே சொல்லிவிட்டு அதை பூசை செய்யும் நூலாக ஆக்கிவிட்டு அப்படியே பூஜையறையிலே வைத்துவிடக்கூடாது என்று நினைக்கிறேன்.

நாம் இப்படி விவாதிப்பதால், குறைந்தபட்சம் நாம் விவாதிக்கும் கருத்துக்கள் சரியா? அல்லது இவர்கள் சொல்வதில் ஏதேனும் தவறு இருக்கின்றதா என ஒரு சிலரேனும், திருக்குறளைப் படிக்க முயற்சிப்பார்கள் என்ற எண்ணத்திலே நாம் விவாதப் பொருளாய் கொண்டுவருவதில் தவறில்லை என நம்புகிறேன்.

மற்றபடி, காமத்துப்பாலில் சொல்லியுள்ள பரத்தையர் போன்ற கருத்துக்களை நாம் அப்படியே எடுத்துக்கொள்ளக் கூடாது.

உலகப்பொதுமறையின் மேல் உங்களுக்கு இருக்கும் மரியாதைக்கு தலைவணங்குகிறேன்.

நன்றி,
பூங்குழலி.


Chellamuthu Kuppusamy said...

பூங்குழலி!! நல்ல பதிவு. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என வள்ளவனைத் தவிர வேறு எந்த சமய நூல்களும் சொன்னதாகத் தெரியவில்லை. (இவனுக்கு எத்தனை சமய நூல் தெரியும்னு நினைக்காதீங்க. சும்மா ஒரு பில்ட்-அப் தான்). அருமையான முயற்சி. தொடராமல் விட்டுவிடாதீர்கள்.

-குப்புசாமி செல்லமுத்து